நிழல் குறும்படப்பயிற்சி பட்டறை -- அனுபவம்

2012-02-22

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


மாற்றுசினிமாவுக்கான ஒரே களம் அது நிழல்தான்.
நிழல் குறும்படப் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மூன்று
வருடங்களுக்கு மேலாக இருந்துவந்தது. அந்த ஆசை இப்போது நாமக்கல் பரமத்தி
வேலூரில் நடைப் பெற்ற பட்டறை வகுப்பு நிஜமாக்கியது..
வகுப்புகள் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டிசம்பர் 24ம்
தேதியே மாலையே சென்றுவிட்டேன். நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசு
சிரித்தப்படியே வரவேற்றார். ஆகா எப்படியும் வகுப்புகள் நல்லாத்தான்
இருக்கும் என்று அப்பவே தெரிந்தது..
இரவு சாப்பாடு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார்கள்.. அந்த இரவு சாப்பாடே இந்த ஏழு நாளும் பிரச்சினை இருக்காது என்று தெரிவித்தது..
பாதிபேர் அன்று இரவே வந்துவிட்டனர். அங்கேயே மண்டபத்திலே படுத்து உறங்கினோம்.
டிசம்பர் 25ம் தேதி முதல் நாள் வகுப்பு ஆரம்பானது. நிழல் ஆசிரியர்
திருநாவுக்கரசு அவர்கள் வகுப்பு எடுத்தார்.
சினிமாவின் வரலாறுகள், இந்திய சினிமா, தமிழ் சினிமா வரலாறுகள் பற்றி ஒரு
சின்ன குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பதுப் போல சொன்னார்.
சினிமா தன் முன்னால் உள்ள கலைகளான  ஒவியம், சிற்பம்,இசை,
நடனம்,இலக்கியம்,நாடகம் ஆகிய அனைத்து கலைகளையும் உள்ளடக்கியது என்றார்.
 1895 ம்  ஆண்டு டிசம்பர் 25ம் தேதி  லுமியன் பிரதர்ஸ் எடுத்த டிரெயின்
வருகை என்ற காட்சிதான் உலகத்தில் முதன்முதலில் எடுத்த சினிமா ஆகும்.
நமது வகுப்பின் முதல் நாள் தேதியும் டிசம்பர் 25, என்ன ஒரு ஒற்றுமை என்று
வியந்துக்கொண்டேன்.
உலகத்தில் எடுத்த முதன் முதலில் எடுத்த சினிமா அடுத்த வருடமே அதாவது 1896
ம் ஆண்டே பம்பாய் வந்துவிட்டது. 1897ல் சென்னை வந்துவிட்டது.
சினிமாவுக்கான அங்கிகாரம் ஐரோப்பாவிலே சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.
உலகின் சிறந்த திரைப்பட விழா கேன்ஸ் திரைப்பட  விழா ஆகும். சினிமா என்பது
பிளாஸ்டிக் ஆர்ட், ஒரு வினாடியில் 24 ப்ரேம்ஸ் இருக்கிறது என்றும்,
உலகின் கொடுக்கப்படும் சினிமாவுக்கான விருதுகள் பற்றியும் சிறப்புடன்
எடுத்துரைத்தார். வின்செண்ட் சாமிகண்ணு என்ற தமிழர்தான் இந்த சினிமாவை
இந்தியா, பர்மா முழுவதும் எடுத்து சென்றார் என்பதை எடுத்து கூறும் போது
கொஞ்சம் கர்வம் வந்தது.  மேலும் சினிமாவின் கோட்பாடுகள், அதன்
சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் சுவைப்பட கூறினார். பின்னர் குறும்படம் என்றால்
என்ன? அதன் தேவைகள், அதன் கால அவகாசங்கள், வகைகள், புகழ்பெற்ற
குறும்படங்கள் போன்றவை கூறப்பட்டது. யதார்த்தை பதிவு செய்வதுதான்
ஆவணப்படம் என்று கூறி அதன் வகைகள் ஒவ்வொன்றையும் தெளிவுடன்
எடுத்துரைத்தார். அதன் ஒவ்வொரு வகையும் ஆவணமாக எடுத்தாலே வாழ் நாள்
முழுவதும் எடுக்கலாம் என்பது எனது கருத்து. அந்த அளவுக்கு அடர்த்தி
மிகுந்ததாக இருந்தது.
மேலும் குறும்படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள், நடத்தப்படும்
விழாக்கள் மேலும் இணையதளங்கள் என்று சொல்ல சொல்ல எங்களுக்கு மிக ஆர்வம்
தொற்றிக்கொண்டு வந்தது. அன்று இரவு புகழ்பெற்ற குறும்படங்களான பிளாக்
ரைடர், வாட் இஸ் தட், இஞ்சா, மிருககாட்சிசாலை  ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முதல் நாள் பல தேடல்களுடனே முடிவடைந்தது.

இரண்டாவது நாள் நடிப்பு பயிற்சி என்று சொன்னவுடனே மேடையில் கூப்பிட்டு
நடிக்க வைப்பார்கள் என்று எண்ணினேன். நான் நினைத்த விசயத்தை
தவிடுபொடியாக்கி நடிப்பு என்றால் என்ன? அது மனதுரீதியான விசயம் என்ற
நடிப்பின் தந்திரத்தை காலை வகுப்பு எடுத்த சுரேஸ்வரனும் மாலை வகுப்பு
எடுத்த தம்பி சோழனும் எங்களிடமிருந்து வெளிகொணர்ந்தனர். எங்களை
குழந்தைகளாகவும், பறவைகளாகவும். மிருகங்களாகவும் மாற்ற வைத்தனர். இரவு
டாம் டிக்மரின் " ரன் லோலா ரன் " என்ற ஜெர்மனிய படம் திரையிடப்பட்டது.
மேலும் குறும்படங்களான "சித்ரா" இது அ.முத்துலிங்கத்துடைய சிறுகதையை
தழுவி எடுக்கப்பட்டது. மேலும் "ஆழம் காத்து " என்ற படம் எங்கள் மொளனங்களை
உடைத்தது. என்னை வியப்பில் ஆழ்த்தியது.


மூன்றாம் நாள் திரைக்கதை பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. கதை வேறு; திரைக்கதை
வேறு என்பதை ஆரம்பத்திலயே பாலுமணிவண்ணன் புரியவைத்துவிட்டார். அவரின்
எளியமையான சொற்றொடர்களால் திரைக்கதை கலை எங்கள் மூளைக்குள் பதிய
ஆரம்பித்தது. திரைக்கதை அடிப்படை என்ன?  அது எவ்வாறு இருக்கவேண்டும் ?
என்பதை எங்களுக்குள் விதைக்கப்பட்டது. பின்னர் எங்கள் அனைவருக்கும் ஒரு
வரியில் கதை சொல்லி அதற்கு திரைக்கதை எழுத வைத்தார். ஒரு சினிமாவுக்கு
திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வகுப்பில் நன்கு
கற்றுக்கொண்டோம்.


நான்காம் நாள் படத்தொகுப்பு பற்றி பொன்குமார் எளிமையாக புரிகிற முறையில்
கூறினார். ஒரு எடிட்டரின் பங்கு என்ன? பொன்குமார் படத்தொகுப்பு பற்றி
மட்டுமல்லாமல் ஒளிப்பதிவின் அம்சத்தை சொல்லி அதன் மூலம் படத்தொகுப்பை
விளக்கியது சிறப்பாக இருந்தது. பழைய முறை எடிட்டிங், அதன் மிஷின்
போன்றவைகளை காட்சிகள் மூலம் காட்டினார். பிலிம் சைஸ், அதன் ரெசொலுயுசன்,
இடிஎல், டைம்போர்டு, லினியர் எடிட்டிங் நான் லீனியர் எடிட்டிங்க அது
எங்கேயேல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது.  அதன் சாப்ட்வேர்கள், அதன்
தொழில்நூட்ப பார்மட்கள் என அனைத்தையும் சொல்லிகொடுத்தார். இன்னொரு நாளும்
இந்த வகுப்பு இருக்ககூடாதா என்று தோன்றுகிற அளவுக்கு இருந்தது.


ஐந்தாம் நாள் ஒளிப்பதிவு வகுப்பு எடுக்கப்பட்டது. கேமரா ஷாட்கள், கேமரா
கோணங்கள்,கேமரா நகர்தல் போன்றவை கற்றுகொண்டோம் அதன் ஒவ்வொரு விசயத்தையும்
எடுத்துகாட்டுடன் விளக்க்ப்பட்டது. அதன் பின்பு  நாங்கள் பார்த்த ஒவ்வொரு
திரைப்படத்தையும் இது இந்த ஷாட், இது டாப் அங்கிள் என பிரித்துபார்க்கும்
பக்குவத்தை இந்த வகுப்பு கற்றுகொடுத்தது.

பின்னர் சக்திவேல் அவர்கள் சினிமாவின் pre production,  post production
பற்றி அழகாக எடுத்து கூறினார். கதை தீர்மாணிப்பது, படம் தயாரித்து
முடித்ததும் அதை விளம்பரப்படுத்துவது, அதை விற்பது போன்ற நூணுக்களை
கூறினார். இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா என்று யோசிக்க வைத்தது.

                    

ஆறாவது நாள் நாங்கள் எற்கனவே பிரிக்கப்பட்ட குழுக்களாக படம் எடுக்க
கிளம்பினோம். இதுவரை படத்தை பார்க்க மட்டும் செய்த எங்களுக்கு இது ஒரு
புது அனுபவமாக இருந்தது. அதை அன்றிரவே எடிட்டிங் நாங்களே செய்தோம்.
மேலும் அன்று செந்தில் அவர்களின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வகுப்பு
எடுக்கப்பட்டது. அதன் தேவைகளையும், வருங்கால வாய்ப்புகளையும்
விளக்கினார்.
                                         
எழாவது நாள் நடைபெற்ற அனுபவ பகிர்வு உண்மையிலே மனம் நெகிழவைத்தது. ஒரு
வார எப்படி போனதென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு எங்கள் நட்பு
மறக்கமுடியாதிருந்தது.
இறுதியில் டைரக்டர் களஞ்சியம் அவர்கள் சான்றிதழகளையும் நாங்கள் எடுத்த
குறும்பட சிடிக்களையும் வழங்கினார். இனிதாக நிறைவடைந்தது  நாமக்கல்
பயிற்சி பட்டறை.
    





இந்த நல்ல வாய்ப்பை அமைத்துக்கொடுத்த நிழல் திருநாவுக்கரசுக்கு என்
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வசன தேவதை - - சிறுகதை

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



திருநெல்வேலி பஸ் மேற்கே போனதும் வாயில பல் தெரிய சிரிச்சான் பிச்சை. கையில் நூறு ரூபாயை நோட்டை தொடடுப் பார்த்தான். அம்மாவ பஸ் ஏற்றிவிட வந்தவனுக்கு நூறு ரூபாயை கையில் திணிச்சுட்டு போயிட்டா. நூறு ரூபாயை தடவிப்பார்த்துட்டு டிக்கெட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். வீட்டில் செவனென்னு ஆதித்யா டிவி பார்த்துட்டு இருந்தான்.  பிச்சைக்கு காமெடின்னா ரொம்ப பிடிக்கும். அவசரமாய் திருநெல்வேலிக்கு கிளம்பிட்டு இருந்தவள். பிச்சையை பஸ் ஏற்றிவிட கூவி கூவிப்பார்த்தாள். இவன் காதுக்கு ஏறுகிற மாதிரி தெரியல. " ஏல மூதி.. நானும் தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன்.. நீயும் அந்த டிவியைப்பார்த்துட்டு கெக்க பிக்கன்னு சிரிச்சிட்டு இருக்க..வால... இந்த மூட்டையை என்னால எப்படி தூக்கிட்டு போக முடியும்... எல்லாம் உங்க அக்காவுக்குத்தான் போகுது.. நீ கொண்டு கொடுன்னா.. பெரிய இவன் கணக்கா போக மாட்டுங்க.. " என்று புலம்பிக்கொண்டே வாசல் வரை வந்துட்டு திரும்பி பார்த்து
" பஸ் ஸ்டாண்டுக்கு வந்தா காசு தாரேன்... " என்றாள். உடனே துள்ளிகுதிச்சு டிவியைக்கூட அணைக்காமல் ஒடிவந்துட்டான்.
காசை கூடுக்கும்போது "  மத்தியானம் மட்டும் செவுடி அக்காட்ட உனக்கு சாப்பாடு கொடுக்க சொல்லிருக்கேன்.. மத்த நேரத்துக்கு கடையில சாப்பிட்டுக்கோ.. அதுக்குத்தான் இந்த ரூபாய்.. செலவு பண்ணித் தொலைச்சுக்காத... ரெண்டு நாளுல திரும்பிருவேன்.. "

நேரா சவுந்திரநாடார் கடைக்கு முன்னால் போய் நின்னான். வெளிய இருந்து இம்மானுவேலுக்கு மிஸ்டு கால்  கொடுத்தான். எதுக்குலன்னு முகத்தில் படிந்திருக்கும் மைதா மாவை துடைச்சுக் கொண்டே வந்தான் இம்மானுவேல்.
" சீக்கிரம் சொல்லு... பெரியவரு வர்ற நேரம்..."
"எப்ப வருவ... போரடிக்குது.. "
" போரடிக்குதுன்னா..ஒரு வேலைக்கு போகாத.. இப்படி ஊரு சுத்திட்டு இருந்தா..அடிக்கத்தான் செய்யும்... மூணு மணிக்கு மேல வாரேன்.. "
"சரி சரி அட்வைஸ்லாம் பண்ணாத.. எங்க மாமா பாம்பேல எனக்கு வேலை பார்த்துட்டு இருக்காரு.. வந்தவுடனே உங்க மூஞ்சில கரியைப் பூசிட்டுப் போயிருவேன்.. மிக்கேல் எங்க இருப்பான்...?"
"அவன் எங்கிருப்பான், வெல்டிங்க பட்டறையில்தான் இருப்பான்.. நீ வேணா அவன் கூடப் போய் கதை பேசிட்டு இரு... ஆனாலும் உன்க்கு இந்தப் பெருமை ஆகாதுடா.. பாம்பே மையிருன்னு... சாயங்காலம் பார்க்கலாம்..." என்று சோப்பு படம் போட்டிருந்த பனியனால் முகத்தை துடைத்துவிட்டு போயிட்டான். 
வெயில் மண்டையை பிளந்தது. பண்ணிரண்டு மணிக்கு மேல் கரெண்ட் போயிரும். வீட்டில் போய் ஒண்ணும் பண்ண முடியாது. செவுடி அக்கா எப்படியும் இரண்டு மணிக்கு மேல்தான் சாப்பாடு ரெடி பண்ணும். மிக்கேல் கடைக்கு போலாமா என்ற யோசனையிலே வெங்கடேசபுரம் பஸ்டாண்டை வட்டம் அடித்தான். ஒருவழியா முடிவுக்கு வந்து ஒரு தம் போட  பவுல் அண்ணன் கடைக்குப் போனான்.
பவுல் அண்ணனுக்கு ஊரு பக்கத்துல சாலைப்புதுர். வெங்கடேசபுரம் ஊரு பஜார்லாம் வச்சு பெரிய ஊரா இருந்தாலும் இங்க ஸ்கூலு கிடையாது. இங்க உள்ளங்க அங்கேப் போய்த்தான் படிக்கனும். இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். போற வழியில வரிசையா ஓடை மராமாத்தான் இருக்கும். ஸ்கூலுக்கு போறதுக்கு இன்னொரு வழியும் உண்டு .அது வாய்க்கால் ஒரமா வரும். அதுலத்தான் பிச்சை நடந்துப் போவான். அந்த வழியிலே பெரிய பெரிய ஓட மரமா இருக்கும் . அதன் பொந்துக்குள்ள கண்ட கண்ட புக்கெல்லாம் சொருகி வச்சுருப்பாங்க. அதைப் படிக்கிறதுக்கே பிச்சை அவன் பிரெண்ட்ஸ் எல்லாரும் அந்த வழியே போவாங்க. அந்த ஓடைக்காடு ஒரு திகில் பயணமா இருக்கும். அந்த வழியாத்தான் பவுல் அண்ணன் சைக்கிளில் வருவாரு. ஸ்கூலு முடிஞ்சு வருகிற பசங்கள எப்படியும் ஏற்றிக்கிட்டு வருவாரு. இப்பல்லாம் பைக் வாங்கிட்டாரு இப்பவும் ஏற்றிட்டு வருவாரா தெரியல. பவுல் அண்ணன் கடையில் ஒரு சிகரெட்டும் பாக்கும் வாங்கி கொண்டான். பக்கத்துல  கம்ப்யூட்டர் செண்டர் இருந்த இடத்தைப் பார்த்தான். ஜான்ஸி ஞாபகம் வந்தது. ஜான்ஸி கருங்கடல்காரி.. அப்பத்தான் புதுசா வெங்கடசேபுரத்தில் கம்ப்யூட்டர் செண்டர் தொடங்குனாங்க. பனகுளம் மெர்ஸி டெய்லர் தம்பி கில்பர்ட்தான் அதுக்கு ஒனர். பிச்சைக்கு கில்பர்ட்ட நல்லா தெரியும். செண்டர் ஒப்பன் பண்ணினதுல இருந்து அங்கயேத்தான் கிடப்பான். பிச்சைக்கு கம்ப்யூட்டரில் ஓண்ணும் தெரியாதுனாலும் அங்க போய் கொஞ்சம் கத்துகிட்டான். பிச்சை பத்து வரைக்கு படிச்சுட்டு பேட்டை .டி. க்கு படிக்கப் போயிட்டான். கம்ப்யூட்டர் செண்டரில் பெஞ்சை துடைக்கிற வேலைத்தான். இருந்தாலும் கம்ப்யூட்டரில் வேலை பார்க்காண்டான்னு எல்லாரும் அவன் மேல பொறாமை பட்டார்கள். முக்கியமா மளிகை கடை இம்மானுவேலும், வெல்டிங்க்டை மிக்கேலும். அங்க வச்சுதான் ஜான்ஸியைப் பார்த்தான். அவ வந்த அன்னைக்கு இவன் மட்டும்தான் கடையில இருந்தான். இவன்தான் டீச்சர்னு நினைச்சுட்டு குட் மார்னிங்க சார்னுலாம் சொல்லிச்சு. இவன் ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டான். ஜான்ஸி அன்னைக்கு வெள்ளை கலர் சுடிதாரில் வந்திருந்தாள். கையில காதுல கழுத்துல ஒன்னும் இல்லை. மொட்டையா இருந்தாள். அவளுடைய அப்பா சர்ச் பாஸ்டராம். அதான் முதல் நாளுல வெள்ளை கலரில் ஜொலித்தாள். அவளைப்பற்றி எல்லாம் விசாரிச்சு முடிக்கவும் கில்பர்ட் உள்ளே வந்தான். பிச்சை சேரில் இருந்து எழுந்ததும் கில்பர்ட் உட்கார்ந்தான். ஜான்ஸி பிச்சையை முறைச்சுப் பார்த்தாள்.  பிச்சைட்ட என்ன சொன்னாளோ அதை மறுபடியும் கில்பர்ட்டிடம் சொன்னாள்.
"என் பேரு ஜான்ஸி. எங்க அப்பா பேரு திரவியம். எங்க அப்பா சர்ச் பாஸ்டரா இருக்காரு. ஊரு கருங்கடல். எனக்கு ஒரு அக்கா. அவ பேரு மெஸ்ஸி. அவளை பழனியப்பபுரத்தில கட்டிகொடுத்துருக்கு.."
"ஏய்.. ஏய்..  நிறுத்து.. இதலாம் எதுக்கு சொல்லுற.."
"அந்த சாருதான் இப்படி சொல்லனும்னு சொன்னாரு.. " என்று பிச்சையை கையைக் காட்டினாள்.
"அவனே ஒரு எடுபிடி..நீ அவனைப் போய் சாருங்குர.." என்று கில்பர்ட் பிச்சையை தாழ்த்திபேசி ஜான்ஸிட்ட நல்ல பேர் வாங்க பார்த்தான். அடுத்த நாளுல இருந்து ஜான்ஸியைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். ஒருநாள் அவளிடம்
"எப்படிங்க இப்படி கழுத்துலயும், காதுலயும் ஒன்னு போடாம இருக்கிங்க.. அசிங்கமா இருக்காது...?"
"நான் அசிங்கமா இருக்கனா..." பிச்சை கண்ணைப் பார்த்து கேட்டாள்.
"நீங்க இல்லைங்க.. இங்க நிறைய பேரு இப்படித்தான் சுற்றிட்டு இருக்காங்க.. நீங்க தேவதைங்க.. தேவதைங்க எப்போதும் இப்படித்தான் மொட்டையா அழகா இருக்கும்... நீங்க சிரிச்சாலும் அழகா இருக்கிங்க..." என்று வழிந்தான்.
" ஒவரா பேசாதிங்க.. எங்க அக்கா என்னை விட நல்லா இருப்பா..அவளை நீங்க பார்க்கனும்.. எங்க ஊர் சர்ச்சுக்கு ஒரு நாள் வாரீங்களா.. நல்லா இருக்கும்..இந்த ஞாயிற்றுகிழமை.."
இவன் தலையை ஆட்டிட்டு வந்துட்டான். ராத்திரி பூராவும் அவள் நினைப்புதுதான்.. அம்மாட்ட கேட்டான்.
" அம்மா .. உனக்கு ஒரு மொட்டச்சி மருமகளா வந்தா ஏத்துக்கிடுவியா... "
"அடி செருப்பால..." என்ற  குரலோடு செருப்பும் பறந்து வந்தது.

கல்லறைதோட்டத்தில் வச்சு பீர் அடிச்சுட்டு இருந்தாங்க மூணு பேரும்.
" ஞாயிற்றுகிழமை படத்துக்கு போவாம..."
"நான் வரல.. எனக்கு வேலை இருக்கு..." என்று படபடத்தான் பிச்சை.
"அப்படி என்ன வேலை.."
"எனக்கு கருங்கடலுக்கு ஒரு வேலை விசயமா போகனும்.. நீங்கத்தான் எனக்கு வண்டி கொடுக்கனும்.. மிக்கேலு கொடுடா.. ப்ளீஸ்.."
"கருங்கடலுக்கு எதுக்குடா.." மிக்கேல் கேட்டான்.
" அதாண்டா.. அந்த கருங்கடலுகாரியைப் பார்க்க போறாண்டா.. " இம்மானுவேல் எடுத்துக்கொடுத்தான்.
"டேய் அவளா.. நல்ல பிகருதான்.. ஆனா அவ அப்ப பாஸ்டருடா.. வசனகர்த்தாடா... செத்தான் பிச்சை இனிமேல்.. ஹோசன்னா பாடுவோம்... யேசுவின் நாமமே.. இப்படி பாட்டு பாடிக்கிட்டு திரிவாண்டா.. " என்று மிக்கேலும் இம்மானுவேலும் சேர்ந்து கிண்டல் பண்ண, பிச்சை கோபத்துடன் எழுந்துப் போயிட்டான். போகும் போது
"அப்பாலே போ சாத்தானே.." என்று அவர்கள் இருவரையும் பார்த்து சொல்லிட்டுப் போனான்.
சொன்னமாதிரி ஞாயிற்றுகிழமை அவனால் போக முடியவில்லை. அடுத்த நாள் கோபத்துடன் வருவாள்னு பார்த்தா சிரிச்சிக்கிட்டேதான் வந்தா.
"என்ன பிச்சை.. ஒரு மாதிரி இருக்கிங்க..இந்தாங்க..."  என்று தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு வசனத்தை எடுத்து நீட்டினாள்.
"எங்க அம்மா, அப்பாட்ட நீங்க வருவிங்கன்னு சொன்னேன்..அவ்வியளும்  நீங்க வருவிங்கன்னு பார்த்தாங்க.."
வசனத்தை எடுத்துப் பார்த்தான். "  இனிமேலும் நான் எந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.  ஏசாயா 46:4 "
"என்னங்க...இது.."
"வசனம்..!!"
"அது எனக்கு தெரியும்... இதுக்கு அர்த்தம் என்ன...?" பிச்சை வேற அர்த்தத்தில் கேட்டான்.
"அதுக்கு.. கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்குவாருன்னு அர்த்தம்,, போதுமா.."
"அவ்வளவுத்தானா..." என்ற எமாற்றத்துடன் வந்தான். அந்த வசனத்தை வீட்டின் கதவில் ஒட்டினான். அம்மாவுக்கு அந்த வசனம் பிடிச்சிருந்தது. " நீ உருப்புடுவடா.. எப்படியோ பைபிள்லாம் வாசிக்க ஆரம்பிச்சிட்ட.. இந்த வீடு இரட்சிக்கப்பட்ட வீடா மாறிரும்.." என்று சந்தோசத்தில் பொங்கிப்போனாள்



ஜான்ஸி அடிக்கடி வசனம் கொடுத்துட்டு இருந்தாள்.  " உன் துக்கம் சந்தோசமா மாறும், வாதை உன் கூடாரத்தை நெருங்காது.." என பல வசனங்கள் இவனுக்கு பிடிக்க ஆரம்பித்தது. அதுக்குள்ள கில்பர்ட் அண்ணனுக்கு நாசரேத்துல வாத்தியார் வேலை கிடைச்சதால் கம்ப்யூட்டர் செண்டரை மூடிட்டாங்க.  ஜான்ஸி பிரிவின் வலியில்லாமல் பிரிந்துப் போனாள். இவன் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டான்.
" உன் முள் என்னை காயப்படுத்தாமல் காயப்படுத்தியது " என்று இவனா ஒரு வசனங்கள் சொல்லிகொண்டு திரிந்தான். ஒரு மாசம்தான் ஆகுது அவளை பிர்ந்து அதுக்குள்ள பல வருசம் ஆன மாதிரி இருக்கு. 

பவுல் அண்ணன் கடையில் வாங்குன சிகரெட் முடிஞ்சுட்டு. தீடிரென்று ஜான்ஸி ஞாபகம் வந்து இவனை நிலைக்குள்ளாக்கியது. பேசாம கருங்கடல் போயிரலாமான்னு யோசிச்சுட்டு மறுபடியும் ஒரு தம் பற்றவச்சுகிட்டு மிக்கேல் பட்டறைக்கு நடந்தான்.
மிக்கேலிடம் வண்டி வாங்கி வச்சுகிட்டான். கருங்கடல் ஒரு உள்காடு. பஸ்லாம் கிடையாது.  ஜான்ஸியை அவங்க மாமாதான் கொண்டு விட்டுட்டுப் போவார். நேரா வீட்டுக்கு போய் செவுடி அக்கா வீட்டுல சாப்பிட்டான். சாயங்காலம் வண்டியை எடுத்துட்டு கருங்கடலுக்கு போயிட்டான். இப்பத்தான் அந்த ஊருக்கு முதல் தடவையா போறான். நேரா சர்ச்சுக்கு பக்கத்தில் உள்ள திண்டில்  போய் உட்கார்ந்தான். அங்குள்ள நல்ல தண்ணிர் பைப்புல தண்ணிகுடித்தான். ஒரு பெட்டிகடைக்குப் போய் " இங்க பாஸ்டர் வீடு எங்க இருக்கு.." என்றான்.
"அது கடைசி தெருவுலா..   நேரா போயி இடது பக்கம் திரும்புங்கன்னு" கையை ஆட்டிகீட்டி சொன்னார். ஜான்ஸி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த தெருவுல கடைசி வீடாக அது இருந்தது. வீட்டுனுள் சிரிப்பு சத்தம் அதிகமா கேட்டது. இவன் நிக்குற சத்தம் கேட்டு ஒரு பொண்ணு வெளியவந்துட்டு உள்ளே போய் ஜான்ஸியை கூட்டிட்டு வந்துச்சு.
வெளியவந்து பிச்சையைப் பார்த்ததும் " எப்படி இருக்கிங்க பிச்சை"  படியில் இருந்து இறங்கி வந்தாள். உள்ளே திரும்பி அப்பா இங்க கொஞ்சம் வாங்கன்னு சத்தம் கொடுத்தாள்.
" சும்மா. இந்த பக்கம்.. சவேரியார்குளம் வரைக்கும் வந்தேன்.. அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.. எப்படி இருக்கிங்க.."
என்றான் பிச்சை. பேச பேச வாய் நடுங்கியது.
அதுக்குள்ள அவங்க அப்பா திரவியம் வர, ஜான்ஸி பிச்சைக்கு அறிமுகம் செய்தாள்.
" நீங்க நல்ல நேரத்துக்குத்தான் வந்துருக்கிங்க... நாளான்னைக்கு எனக்கு மேரேஜ்.. எப்படிடா உங்களை கண்டுபிடிக்கலாம்னு இருந்தேன்.. நீங்களே வந்துட்டிங்க.. ஒரு நிமிசம்.." உள்ளேப் போய் பத்திரிகை எடுத்துட்டு வந்தாள்.  உங்க முழுபேரே பிச்சையா என்று கேட்டுக்கொண்டே பேனாவால் எழுதப் போனாள்.
"இல்லை.. அந்தோணி பிச்சை.."
இந்தாங்க கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வந்தரனும் நான் ரொம்ப எதிர்பார்ப்பேன். கொடுத்துட்டு
"இருங்க டீ சாப்பிட்டுட்டு போலாம்.. "
"இல்ல.. பரவாயில்லைங்க.. நான் வாரேங்க.." என்று சொல்லிவிட்டு தோத்த மாடு மாதிரி வண்டியை எடுத்துட்டு ஊர் வந்து சேர்ந்தான்.
வரும்போது அவள் நினைப்பாத்தான் இருந்தது. இந்தப் பிள்ளை இப்படி எமாத்திட்டே.. வசனம் கொடுத்து வசனம் கொடுத்து நம்மளை இப்படி புலம்ப வச்சுட்டாளேன்னு டிக்கெட் பாக்கெட்டில் இருந்த ரூபாயைக் கொண்டு டாஸ்மாக்கில் செலவழித்தான்.

ஜான்ஸி கல்யாணத்துக்கு போகவேண்டாமுன்னு முடிவெடுத்து வீட்டிலே கிடந்தான். அம்மா வேற போன் பண்ணி நான் வர இன்னும் இரண்டு நாளு ஆகும்  நீ மேரி அக்கா கடையில சாப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டாள். பிச்சைக்கு வீட்டில் ஒட்டிவச்சிருந்த வசனத்தை பார்க்கும்போது ஜான்ஸி ஞாபகமா வந்தது. கடைசியில் கல்யாணத்துக்கு போலாம்னு முடிவெடுத்து பாக்கெட்டை தடவிப் பார்த்தால் பத்து ரூபாய் தாள் மட்டும் மிச்சம் இருந்தது. திசையன்விளையில் கல்யாணம் எப்படியும் போயிட்டு வருவதற்கு ஐம்பதாவது வேணும். மிக்கேலிடம் கெஞ்சி கூத்தாடி ஐம்பது ரூபாய் வாங்கிட்டு பஸ் ஏறினான். தீடிரென்று எதாவது கிப்ட் கொடுக்கனுமே என்று ஞாபகம் வந்தது. கையில் காசில்லை. என்ன பண்ணுவது என்று சுற்றி சுற்றிப் பார்த்தான். பஸ்ஸில் கூட்டம் அவ்வளாவா இல்லை. பக்கத்தில் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். தான் மொபைலில் உள்ள மெமரி கார்டை கழற்றினான். ஆபத்துக்கு பாவமில்லை..!
"தம்பி... 2ஜிபி மெமரி கார்டு வெளிய வாங்குனா, 400ரூபாய்..எங்கிட்ட 150ரூபாய்க்கு வாங்குதுயா.. எல்லா புது சாங்கும் இருக்கு.. "என்றான்.
அவன் பிச்சையை ஒரு மாதிரி பார்த்துவிட்டு எழுந்து வேற இடத்துக்கு சென்றான். மறுபடியும் இன்னொரு ஆளிடம் சென்று இதே புராணம் பாடினான். அவர் நூறு ரூபாய் எடுத்துகொடுத்து வாங்கிகொண்டான். தன் நிலைமையை நினைத்து நொந்துக்கொண்டான்.

திசையன்விளையில் இறங்கி கிப்ட் செண்டர் போனான். என்ன வாங்கலாம் என்று அலசி ஆராய்ந்து ஒரு கிப்ட் வாங்கினான். கல்யாண மண்டபம் ரொம்ப கூட்டமாக இருந்தது. ஜான்ஸி கல்யாண கோலத்திலும் கழுத்திலும் கையிலும் ஒன்றும் போடாமல் இருந்தாள்.  ஜான்ஸியை பார்க்கும்போது அழகிய கடற்கன்னி மாதிரி இருந்தது பிச்சைக்கு. ஒரு அலங்காரம் இல்லாமல் வெற்றுடலாக இருந்தாள். மேடை ஏறி கிப்டை கொடுத்துவிட்டு இறங்கினான். தன் முதுகை ஜான்ஸி பார்ப்பதாக உணர்ந்து திரும்பி பார்த்தான். அவள் போட்டாவுக்கு போஸ் கொடுத்து சிரித்துகொண்டிருந்தாள். கொஞ்சம் கண்ணீர் வந்தது. துடைத்துகொண்டு சாப்பிடாமல் மண்டபத்தை வெளிய வந்து வெங்கடேசபுரத்துக்கு பஸ் ஏறினான். அந்த கிப்டை எப்ப திறந்துப் பார்ப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அதில் " நீ ஆசிர்வாதமாய் இருப்பாய்...! ஆதியாகம் 12:2 " என்று பொன்னிற எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும். கண்டிப்பா அதை ஜான்ஸி பார்ப்பாள்...!!!


--ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி